144 தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், பஞ்சாயத்துத் தலைவர் உட்பட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளி விட்டும் கூட்டத்தில் மக்கள் பங்கேற்றனர். அப்போது அவர் பேசுகையில் கொரோனாவிற்கு பயப்படுவதை விட திமுகவைப் பார்த்துத் தான் எடப்பாடி பயந்து கொண்டிருக்கிறார். 

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் எப்போதும் ஆளும் கட்சிதான் அதிகமாக வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் எவ்வளவோ அநியாயங்கள் - அக்கிரமங்கள் செய்தார்கள். அதையும் மீறி எதிர்க்கட்சியாக இருந்த திமுக தான் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக செயற்குழு கூட்டத்தைக் கூட்டியபோது பரவாத கொரோனா, கிராம சபைக் கூட்டத்தால் பரவுமா என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்தபாபு மீது 143, 188 ஆகிய பிரிவின் கீழ் வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.