Governors who run the royal family in Rajpavan

சமீப தமிழகம் இதுவரையில் கண்டிராத அதிரடி கவர்னராய் இருக்கிறார் பன்வாரிலால் புரோகித். மாவட்டம் மாவட்டமாய் சென்று மக்கள் குறைகளை கேட்டறிவது, தூய்மைப்பணியில் ஈடுபடுவது, அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது என்று பொது வெளியில் கலக்கிக் கொண்டிருப்பவர், தனது அலுவலகமான ராஜ்பவனிலும் சப்தமில்லாமல் சில சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார். அதாவது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ராஜ்பவனின் தேவையற்ற செலவுகளை குறைத்து தள்ளியிருக்கிறார் புரோகித். இதைத்தொட்டு அவரிடம் இன்னும் பல அதிரடிகளை எதிர்பார்க்கிறது தமிழகம். 

புரோகித்துக்கு முன்னால் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ், பெரிதாய் இங்கே தங்கவில்லை. மஹாராஸ்டிராவில் இருந்து அடிக்கடி பறந்து வந்து தனது பணிகளை (!?) மட்டும் கவனித்துவிட்டு சென்றார். ஆனால் அவருக்கு முன்பாக பல வருடங்களாக தமிழக கவர்னராக இருந்த ரோசய்யா ஒரு குறு நில மன்னர் போல் தமிழக அரசு அவருக்கு அளித்திருக்கும் சலுகைகளை சலிக்கச்சலிக்க அனுபவித்தார். அவரது குடும்பத்தினரும் ஆந்திராவிலிருந்து வந்து அரசு பணத்தில் குதியாட்டம் போட்டிருக்கின்றனர் ராஜ்பவனில். இது போக தமிழகமெங்கும் தனியார் பல்கலலை, தனியார் கல்லூரிகளின் விழாக்களில் பங்கேற்ற ரோசய்யா அன்பளிப்புகளையும் அள்ளிக் குவித்துள்ளார். ஆனால் ஒரு அரசு கல்லூரிக்கு கூட சென்று மாணவர்களை ஊக்குவிக்கவில்லையாம் அவர். தமிழக கவர்னராக இருந்த ரோசய்யாவை விசாரிக்க வேண்டும்! என தமிழகத்தை சேர்ந்த பல பொது நல செயல்பாட்டாளர்கள் கோரிக்கை அட்டையை உயர்த்தியிருக்கின்றனர். 

இந்நிலையில் புரோகித்தின் மக்கள் நலன் காப்பு மற்றும் அரசு செலவு தடுப்பு ஆகியவை தொடர்பான தடாலடி நடவடிக்கைகள் தமிழகத்தை மெர்சலாக்கியுள்ளன. 

சென்னையை போலவே நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் கவர்னருக்காக ஒரு ராஜ்பவன் இருக்கிறது. வருடத்துக்கு ஒரு முறை கவர்னர் வந்தாலும் வரலாம் அல்லது இங்கே வராமலும் போகலாம். ஆனால் அந்த விசிட்டுக்காக எப்போதும் தயார் நிலையில் வைக்கப்படுமாம் ஊட்டி ராஜ்பவன். கிட்டத்தட்ட 25 பணியாளர்கள், அவர்களுக்காக மாதாமாதம் பல லட்சக்கணக்கில் அரசு சம்பளம் என்று போய்க் கொண்டிருக்கிறதாம். 
கடந்த 2011-2012ம் நிதியாண்டில் கிட்டத்தட்ட ஒன்பதரை லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்தியுள்ளார்களாம், இதற்கடுத்த ஆண்டுகளில் பல லட்சங்களை மின் கட்டணமாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பில்டிங்கின் பராமரிப்பு செலவுக்காக மட்டும் 2011-12ம் ஆண்டுகளில் இருபத்து ரெண்டரை லட்சம் செலவாகி இருக்கிறதாம். 2014-2015ல் பத்தொன்பது லட்சம் ரூபாய் மற்றும் நாற்பத்தைந்து லட்சம் ரூபாய் என்று செலவழித்துள்ளார்கள். 

இதே போல் சென்னையில் கவர்னருக்கு இல்ல அலுவலகம், கவர்னரின் செயலகம் என இரண்டு அலுவலகங்கள் இருக்கின்றன. இவற்றில் இல்ல அலுவலகத்தில் மட்டும் கடந்த 2014-2015 ஆம் நிதியாண்டில் 9லட்சத்து 46 ஆயிரத்து 12 ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. கவர்னரின் பயன்பாட்டுக்காக அவரது இல்ல அலுவலகத்தில் மட்டும் 7 சொகுசு வாகனங்கள் இருக்கின்றனவாம். இதில் 2011-ல் மட்டும் 64.5 லட்சம் ரூபாய் செலவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்கப்பட்டிருக்கிறது. 

இப்படியாக ராஜ்பவனுக்கு அரசுப்பணம் கொட்டோ கொட்டென கொட்டப்படுகிறது. அத்தனையும் மக்களின் வரிப்பணம். 

மேற்படி தகவல்களை கோயமுத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெற்று கவர்னர் புரோகித்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறாராம். 

ரெண்டு வேளை சோறு கூட நிதர்சனமில்லாமல் தமிழகத்தில் பல குழந்தைகள் வறுமையில் வாடுகின்றன. ஆனால் அரசு பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்த கவர்னர்களின் இடுப்பு அறுபத்து நான்கு லட்ச ரூபாய் பென்ஸில்தான் அமர்ந்து செல்லும் என்பது எத்தனை அக்கிரமம்! என்பதே மக்களின் கேள்வி. 

நியாயமான நடத்தைகளின் மூலம் நேர்மையானவராய் அறியப்படும் பன்வாரிலால் இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?
எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் ஏழைத்தமிழன்!