மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழகரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக  நிறைவேற்றிய திருமணத்தின் மீது இதுவரை முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஒருமனதாக சட்டம் இயற்றப்பட்டது, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது, அது ஒரு மாதம் தாண்டிய பிறகும் கூட அந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் முன்வரவில்லை. இதனால் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று  எதிர்பார்த்து காத்திருக்கிறது. 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் ஆளுநர் தொடர்ந்து இதில் காலதாமதம் செய்து வருகிறார். இது தமிழக அரசியல் கட்சிகளை கொந்தளிப்படைய செய்துள்ளது. இந்நிலையில் தந்தை பெரியார் திராவிட கழகம், ஆளுனரின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து நாளை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.  இதுகுறித்து அக்கழகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக முடிவு செய்திருக்கிறது. 

அதற்கு ஒப்புதல் கேட்டு தமிழக  ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது, ஆனால் தமிழக கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் காலம் கழித்து வருகிறார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதற்கு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியே காரணம். கிராமப்புற மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 300க்கும் மேற்பட்ட தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும். எனவே  தமிழக அரசு அறிவித்துள்ள கிராமப்புற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை  போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு முற்றுகைப் போராட்டம்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.