governor vidyasagar rao thanks to tamilnadu people

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகப் பணியாற்றியது மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாகவும், தமிழக மக்களின் அன்பு மற்றும் பாசத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்தது. தொடர்ந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவி வகித்து வந்தார். இதனிடையே பல்வேறு உச்சகட்ட அரசியல் பரபரப்பு நிலவி வந்தது. 

இதனால் நிரந்தர ஆளுநர் தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. 

இதைதொடர்ந்து, தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், நாளை 5-ம் தேதி பிற்பகல் சென்னை வருகிறார். 6ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

நாளை விடை பெறுகிறார் வித்யாசாகர் ராவ். தமிழக அரசின் சார்பில் நாளை காலை 8 மணிக்கு பிரிவு உபசரிப்பு விழா நடைபெற உள்ளது. 

இந்நிலையில், வித்யாசர்ராவ் தமிழக மக்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் மகிழ்ச்சி, அமைதி, வளம் பெறவும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து கூறியுள்ளார். 

தொழில்நுட்பம், சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாகவும், கலாச்சாரமும் மரபும் நவீனமயத்துடன் இயல்பாக தமிழ்நாட்டில் இணைந்து செல்கின்றன எனவும் தெரிவித்துள்ளார். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மிகுந்த கட்டுப்பாட்டையும் அமைதியையும் கடைபிடித்ததாகவும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சொத்து மக்கள்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வித்யாசாகர் ராவ் நன்றி தெரிவித்துள்ளார்.