Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் விசிக.. காரணத்தை அடுக்கிய திருமாவளவன்..!

 தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய இருபதுக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் வழங்காமல் காலந்தாழ்த்துகிறார். இது அவர் கொள்கை அளவில் தமிழ்நாடு அரசோடும் தமிழ் மக்களோடும் முரண்படுகிறார் என்பதையே காட்டுகிறது.

Governor RN. Ravi tea party.. viduthalai chiruthaigal katchi boycotting
Author
First Published Jan 25, 2023, 6:42 AM IST

குடியரசு தினத்தன்று ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- குடியரசு நாளில் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு விசிகவைச் சேர்ந்த நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆளுநருக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம். அதேவேளையில், அவ்விருந்தில் பங்கேற்பதைத் தவிர்ப்பது என முடிவு செய்திருக்கிறோம். அத்துடன், தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

Governor RN. Ravi tea party.. viduthalai chiruthaigal katchi boycotting

கடந்த பொங்கல் நாளில் ஆளுநர் அனுப்பிய அழைப்பில் தமிழ்நாடு என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டதோடு தமிழ்நாடு அரசின் இலச்சினையும் அகற்றப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும் , தமிழ் உணர்வாளர்களும் கண்டனக் குரல் எழுப்பினர். தமிழ்நாடு அரசின் சார்பில் ஆளுநரின் நடவடிக்கை குறித்து குடியரசுத் தலைவருக்கும் புகார் அளிக்கப்பட்டது . அதன் பின்னர் ஆளுநர் இந்திய ஒன்றிய அரசால் அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், தற்போதைய குடியரசுநாள் தேநீர் விருந்து நிகழ்வுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்னும் பெயரை பயன்படுத்தியிருப்பதோடு கோபுர இலச்சினையும் அச்சிடப்பட்டுள்ளது. அத்துடன், தமிழகம் - தமிழ்நாடு என்பது குறித்து தான் தெரிவித்த கருத்தைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்றும் ஆளுநர் அண்மையில் தன்னிலை விளக்கமும் அளித்திருக்கிறார். ஆளுநரின் இத்தகைய நடவடிக்கைகள் அவர் கொள்கை அடிப்படையில் மாறிவிட்டார் என நம்புவதற்கு இடமில்லை. மாறாக, பாஜகவின் செயற்பாட்டு உத்தியில் அல்லது தந்திர நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கிற மாற்றமாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

Governor RN. Ravi tea party.. viduthalai chiruthaigal katchi boycotting

தான் ஒரு சனாதானக் கோட்பாட்டு நம்பிக்கையாளர் என்பதை ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்துடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் தடை போடும் வகையில், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய இருபதுக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் வழங்காமல் காலந்தாழ்த்துகிறார். இது அவர் கொள்கை அளவில் தமிழ்நாடு அரசோடும் தமிழ் மக்களோடும் முரண்படுகிறார் என்பதையே காட்டுகிறது.

Governor RN. Ravi tea party.. viduthalai chiruthaigal katchi boycotting

மேலும், அவர் ஆளுநர் என்கிற முறையில் தனது பொறுப்பையுணர்ந்து அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுகிறாரா என்பதும் கேள்விக்குறியாகவுள்ளது. அவருடைய செயல்பாடுகள் பெரும்பாலும் வெளிப்படையாகவே அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவையாக இருக்கின்றன. ஆளுநரின் இத்தகைய போக்கைக் கண்டித்து அவரது அழைப்பைப் புறக்கணிப்பது என விசிக முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு நலன்களைக் கருத்தில் கொண்டும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் தற்போதைய ஆளுநரை இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்; தமிழ்நாடு அரசுக்கு இணக்கமான வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios