மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளதற்கு எதிராகவும், ஆட்சி அமைக்க போதிய அவகாசம் வழங்காததை எதிர்த்து சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றும் சிவசேனாவின் அதிரடி நிபந்தனைகளால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. தனிபெரும் கட்சி என்ற முறையில் முதலில் பாஜகவை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், பாஜக ஆட்சியமைக்கப் போவதில்லை என கூறிவிட்டது. 

இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்க அவகாசம் வழங்கினார். ஆனால், அந்த காலக்கெடுவுக்குள் சிவசேனாவால் எம்எல்ஏக்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தை வழங்க முடியவில்லை. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, கூடுதல் அவகாசம் அளிக்கும்படி சிவசேனா கோரிக்கை விடுத்தது. ஆனால் அவகாசம் அளிக்க மறுத்த ஆளுநர், 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இன்று இரவுக்குள் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கும்படி தேசியவாத காங்கிரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்தப் பதிலும் தெரிவிக்காததால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பகத் சிங் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகின. மேலும், இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிவசேனா கட்சி கடும் அதிருப்தி அடைந்தது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளதற்கு எதிராகவும், ஆட்சி அமைக்க போதிய அவகாசம் வழங்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் கபில்சிபல் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வில் அவசர வழக்காக விசாரிக்க கோரி சிவசேனா முறையிட திட்டமிட்டுள்ளது.