முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7 பேர் விடுதலைக்கான நகர்வை சட்டமன்றத்தில் முன்னெடுத்தார்.

அவர் மறைவுக்கு பிறகு தற்போதைய அதிமுக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இப்போது வரையிலும் எந்த முடிவையும் ஆளுநர் அறிவிக்கவில்லை. பல்வேறு தரப்பினரும் 7 விடுதலையை ஆளுநர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் ராஜிவ் காந்தி கொலையில் சிறையில் இருப்பவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. சட்டவிரோத காவலில் இருப்பதாக நளினி தொடர்ந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நளினி உட்பட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை 2018 லேயே நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் பேரறிவாளனின் கருணை மனு மீதும் ஆளுநர் முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதனிடையே நளினியின் மனு பிப்ரவரி 12 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.