சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது வேலை கேட்டு மனு அளித்த மாற்றுதிறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் சுகாதாரத்துறையில் பணி வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மின்னல் வேக நடவடிக்கை எடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி(28). இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர் எம்.ஏ. படித்துள்ளார். தூத்துக்குடி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அரசு மருத்துவமனையில் நவீன கருவியை தொடங்கி வைத்து காரில் சென்றுக்கொண்டிருந்தார்.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கார் வந்த போது சாலை ஓரத்தில் கையில் மனுவுடன் மாரூஸ்வரி பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த முதல்வர் மாரீஸ்வரியிடத்தில் என்ன என்று விசாரித்தார். அப்போது, மாரீஸ்வரி தனக்கு அரசு வேலை கேட்டு முதல்வரிடத்தில் மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் 2 மணி நேரத்துக்குள் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும்படி அழைத்த முதல்வர் உடனடியாக அவருக்கு பணி வழங்குவதற்கான ஆணை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் படி,  மாரீஸ்வரிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வார்டு மேலாளர் பணி வழங்கி அதற்கான ஆணை வழங்கப்பட்டது. தனக்கு பணி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக மாற்றுத்திறனாளி மாரீஸ்வரி தெரிவித்தார்.