தமிழகம் முழுவதும் நடைபெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 

பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்ததை தொடங்கி உள்ளனர். சென்னை குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக குன்றத்தூர், சிட்லபாக்கம் ஆகிய ஒன்றியத்தை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 2 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, நாமக்கல் கூனவேலம்பட்டி தொடக்கப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகள் திறக்காததால் மாணவர்கள் அவதியுற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு எதிராக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சுனவேலம்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உளப்பட 6 ஆசிரியர் வரவில்லை. இதனால், பள்ளிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மற்றும் அரசு ஊழியர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு நெருங்கும் நேரத்தில் தொடர் வேலைநிறுத்தம் கூடாது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மாணவர் கோகுல் நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.