12 ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஆன்-லைன் மூலம் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளது . இது குறித்து தெரிவித்துள்ள அச்சங்கத்தின் மாநிலத்துலைவர் பி.கே இளமாறன்,    தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு 02.03.2020 ல் தொடங்கி மார்ச் 24 ல் முடிந்தது.  இத்தேர்வினை 8 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.  தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 ல் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உயிர்கொல்லி நோய் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி 19 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்  ஒரு லட்சத்திற்கும் மேலான உயிர்களை பலிவாங்கியுள்ளது. 

 

இது இந்தியாவிலும் பரவி தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரஸ் சமூககூடல் மூலம் பரவாமல் தடுக்க 21 நாள்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது.  தற்போது தமிழ்நாட்டில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அரசின் சரியான நடவடிக்கையின் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் அதிகம் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டி மகிழ்கின்றோம். இந்நிலையில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் தேர்வுமுடிவு எப்போதுவரும் மேற்படிப்பு என்னவாகும் என்று குழப்பத்தில் உள்ளார்கள். எனவே, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வின் விடைத்தாள்கள்  திருத்த முடியாத சூழல் உள்ளதாலும் ,  ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகும் கொரோனா பரவாமல் தடுக்க சமூககூடலை தவிர்த்திடவேண்டும். என்பதால் . 

12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வின் தேர்ச்சி முடிவு மேலும் தள்ளி போக வாய்ப்புள்ளது. ஆகையால் பள்ளிக்கல்வித்துறை   12 ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து  கணினி மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதன் பிறகு  ஆன்-லைன் மூலம் விடுமுறை காலத்திலேயே ஆசிரியர்கள் வீட்டிலிருந்தேபடியே விடைத்தாள்களை திருத்தம் செய்தால் விரைவில் தேர்வுமுடிவுகள் வெளியாகும்.  ஆகையால் விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக திருத்தம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆவனச்செய்யும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன் எனக் கோரிக்கை வைத்துள்ளார்