தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் 133 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை  நேரத்தை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் , ஒருவேளை நேரம் நீட்டிப்பு செய்தால் தினசரி டாஸ்மாக் ஊழியர்களுக்கு 750 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது,  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த டாஸ்மார்க் கடைகள் கடந்த மே 7-ஆம் தேதி திறக்கப்பட்டது .  திறந்த அன்றே 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது .  அதனையடுத்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது கடைகள் திறப்பதற்கு மாற்றாக ஆன்லைனில் மதுபானங்கள் விற்பனை செய்துகொள்ள வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது . இதனையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அதில் சில கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . 

 

இந்நிலையில் காலை 10 மணி முதல் 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, இந்நிலையில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை படு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 133 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்களுக்கு  தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) சார்பில் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டுள்ளது . அதில் கூறப்பட்டுள்ளதாவது :- "தமிழ்நாடு அரசின் உத்தரவின் படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியும் 16.05.2020 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. மதுக்கடைகள் காலை 10மணிக்கு திறந்து, மாலை 5 மணிக்கு மூடப்பட வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த வேலை நேரத்தில் பணியாளர்கள் மதிய உணவுக்கான நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த நிலையில் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை மாலை 7 மணி வரை நீடிக்கப்படும் என மாவட்ட மேலாளர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். 

இதற்கான உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடும் போது,கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பணிபுரியும் பணியாளர்கள் சிரமங்களையும் கருத்தில் கொண்டு, பணியாளர்கள் மதிய உணவுக்கு நேரம் ஒதுக்கி, கூடுதல் நேரப்பணிக்கு தினசரி ரூபாய்  750/= ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஓய்வு பெறும் வயதை நீடிக்க வேண்டும்.  தமிழ்நாடு அரசு அண்மையில் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்ந்தி உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் அதன் பணியாளர்கள் (Regular employees) ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி உத்தரவு வழங்கியுள்ளது. இதில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பணி ஓய்வு குறித்து எதுவும் குறிப்பிடப் படவில்லை. எனவே அரசின் அழைப்பை ஏற்று 17 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களின் (மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்,உதவி விற்பனையாளர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி உத்தரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ( இம் மாதம் மே 2020 ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அந்த அறிவுப்பு  பயன் அளிக்க வேண்டும்) மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றி பணியாளர் நலனுக்கு உதவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.