அக்குழு 2019ல் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் தற்போது அனைத்து உதவிப் பொறியாளர்களின் ஊதியத்தை மாநில அரசு தற்போது வாங்கும் ஊதியத்தில் அடிப்படைச் சம்பளம் ரூ. 6,300/- குறைத்துள்ளது பொறியாளர்களை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 18.11.2020 அன்று தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் உதவிப் பொறியாளர்களுடைய அடிப்படை ஊதியத்தை 15,600/- ரூபாயிலிருந்து 9,300/- ரூபாயாக குறைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கோருகிறது. 2010ம் ஆண்டு அரசுத் துறைகளில் பணிபுரியும் பொறியாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்தார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்கள், வழக்கறிஞர்களுக்கு இணையாக பொறியாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் ரூ. 15,600/-ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது.
இதர பல்வேறு அரசு ஊழியர்களுக்கு ஊதிய அதிகரிப்பு செய்து ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு பதிலாக 2013ல் தமிழக அரசு பொறியாளர்களின் ஊதியத்தை குறைத்தது. இதையொட்டி வழக்கு தொடுக்கப்பட்ட பின்னணியில் அதிகரிக்கப்பட்ட ஊதியமே இதுநாள் வரை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அக்குழு 2019ல் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் தற்போது அனைத்து உதவிப் பொறியாளர்களின் ஊதியத்தை மாநில அரசு தற்போது வாங்கும் ஊதியத்தில் அடிப்படைச் சம்பளம் ரூ. 6,300/- குறைத்துள்ளது பொறியாளர்களை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
முதலாவதாக, இன்று நிலவி வருகிற பொருளாதார சூழலில் உண்மை ஊதியம் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இரண்டாவதாக, இன்று சம்பள குறைப்பு ஏற்பட்டால் பதவி உயர்வு காலத்தில் என்ன நிலைக்கு போனாலும் இந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. மூன்றாவதாக, சம்பள குறைப்பு அதற்கு இசைந்த அளவில் ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதியத்திலும் பிரதிபலிக்கும் ஆபத்தும் உள்ளது. எனவே, அனைத்து தரப்பு பொறியாளர்களும் ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்போது, ஏற்கனவே பெற்று வருகிற ஊதியத்தை குறைப்பது என்பது சரியான அணுகுமுறை அல்ல.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதலமைச்சரின் பொறுப்பில் இருந்து வருகிற நிலையில் அத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை பொறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கணக்கில் கொண்டு இந்த ஊதிய குறைப்பு அரசாணையை ரத்து செய்யும் கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 30, 2020, 12:26 PM IST