Government of Tamil Nadu to ensure that the necessary funds will be provid
தமிழகத்துக்கு தேவையான நிதி விரைவில் வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வறட்சி மற்றும் வர்தா புயல் பாதிப்புக்கான நிதியை பெறுவது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லியை தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதிகுறித்து விவரமாக பேட்டியளித்தார். அப்போது, கைத்தறித்துறைக்கு ரூ.65.3 கோடியும், வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.342 கோடியும், 4 துறைமுகங்கள் கட்டிய வகையில் ரூ.115 கோடியும், கல்வி உரிமைச் சட்டத்தின்படி ரூ.244கோடியும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின்படி ரூ.1,340 கோடியும், ஆதிதிராவிடர் நலத்திட்டங்களுக்கு ரூ.1,986 கோடியும், தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியுள்ளதாகக் கூறினார்.
தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்க நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உறுதி அளித்திருப்பதாகவும் ஜெயக்குமார் அப்போது தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை காகிதப் பூ என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், இரண்டே நாட்களில் மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கோருவது குறிப்பிடத்தக்கது.
