வளர்ச்சிப்பணிகளுக்காக மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டுவருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவரது அறிவிப்பில், ’’மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டுவருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும். மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் தயார் செய்யப்படும்.

முதல்கட்டமாக, கோவை, மதுரை மண்டலங்களுக்கான திட்டங்கள் தீட்டப்படும். இதன் மூலம், பல்வேறு முக்கிய திட்டங்களை முன்னுரிமைப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்குமான வழிவகை - ஒட்டுமொத்த திட்டமிட்ட வளர்ச்சி உறுதிசெய்யப்படும். திருமங்கலத்தை தலையிடமாக கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்.

சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்க ரூ.3958 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். வீட்டுவசதி மற்றும் நகரப்புற மேம்பாட்டுத் துறைக்காக 6,265.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ஒட்டுமொத்தமாக 1,031.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

விபத்து மூலம் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கான காப்பீடு தொகை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.