government is planning to hike bus tickets
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அரசு பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. இதற்கிடையே ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு தொடர்பாக இதுவரை நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் போக்குவரத்து துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தும் பலனில்லை. எனவே ஊதிய உயர்வு, ஓய்வூதியம் முறையாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லத்திலும் மாநிலத்தின் மற்ற சில பகுதிகளிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஏற்கனவே தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்களும் அழுத்தம் கொடுப்பதால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு ஆலோசனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தவுடன், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்துவருகிறது.
