government explained in high court the reason for ticket hike
கடந்த 19ம் தேதி அறிவித்து அதற்கு மறுநாளான 20ம் தேதியிலிருந்து பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியது. சுமார் 50%லிருந்து 100% வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்கள் கடுமையான நிதிநெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரித்தது. அந்த விசாரணையில் மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்கள்.
மனுதாரர்கள் தரப்பு வாதம்:
எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி அரசு திடீரென பேருந்து கட்டண உயர்வை அறிவித்துள்ளது. குறைந்தபட்ச கால அவகாசம் கூட அளிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, நடுக்கர வர்க்கத்தினரும் தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்களும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே பேருந்து கட்டண உயர்வு அறிவிப்பை அரசு திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு வாதம்:
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. போக்குவரத்துத்துறை கடுமையான நிதிநெருக்கடியை சந்தித்துள்ளது. டீசல் விலை உயர்வு, பராமரிப்பு, உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றை சமாளிப்பதற்காகவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வு அறிவிப்பாணை அரசிதழில் இடம்பெற்றுள்ளது என அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நீதிமன்ற உத்தரவு:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. சலுகைகள், மானியங்கள் வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் கூட அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது. ஆனால், புதிய பேருந்து கட்டண அட்டவணையை பேருந்துகளில் ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டு, மனுக்களை தள்ளுபடி செய்தது.
