Governers secretary rajagopal

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்தின் முன்னாள் ஆலோசகர் ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ், தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநரின் செயலராக, கடந்த, 2013ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டார். அவர் செயலராக பொறுப்பேற்ற பின், கவர்னர் மாளிகையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் மாற்றப்பட்டு, புதிய கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் நியமிக்க பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் அதிரடி மாற்றங்களை செயல்படுத்த துவங்கினார்.

தன்னை சந்திக்க வருவோர், பூங்கொத்து மற்றும் பழக்கூடை களைஎடுத்து வர தடை விதித்தார். முன்னாள் கவர்னரின் உறவினர்கள், விருந்தினர் மாளிகையில், 15 நாட்கள் வரை தங்க அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதை, ஐந்து நாட்களாக குறைத்தார். ஆளுநர் மாளிகையில் அசைவ உணவு சமைக்கப்படுவதற்கு தடை விதித்தார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திடீரென கோவை சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மங்கு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தப்போவதாக தெரிவித்தார்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை தங்களது கைப்பாவையாக ஆட்டுவிக்க கவர்னர் மூலம் மத்திய அரசு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கு வசதியாக மத்திய அரசுப் பணியில் உள்ள, பிரதமருக்கு நெருக்கமான, தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

இதன் ஒரு படியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரிகள் சோமநாதனும், ராஜகோபாலும் விரைவில் மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில பணிக்கு அனுப்பப்படுவார்கள் என தகவல் வெளியானது.

இதனிடையே மத்திய அரசுப் பணியிலிருந்து, தமிழகம் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன், கடந்த 23ம் தேதி, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார்..

இந்நிலையில் நேற்று, மத்திய அரசுப் பணியிலிருந்து திரும்பிய ராஜகோபால், கவர்னரின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டார். இனிமேல் ஆளுநர், இந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலும், கண்ணசைவிலும்தான் ஆட்சி அதிகாரம் இருக்கும் என தாகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் எடப்பாடி அரசுக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய செக் என்றும் கருதப்படுகிறது.