முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறி வாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை தொடர்பாக மாநில அரசு ,ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பலாம் என்றும் இதற்கு தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, விதி எண்.161-இன் கீழ் ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்த போதிலும், அதை ஆளுநர் ஏற்பதற்கு காலவரையறை ஏதும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

இந்நிலையில்  மாநில அரசு பரிந்துரை செய்யும் முடிவை ஆளுநர்ஏற்காமல் இழுத்தடிப்பதும், அதுதொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதும் அப்பட்டமான அரசியல் சட்ட மீறல் என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.