திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காவேரி மருத்துமனைக்குச் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ,திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு சுவாச கோளாறு காரணமாக ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டதாக  காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்தது.

கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் உடனடியாக  ஆம்புலன்ஸ் வாகனம் மூலம்  தொடர் சிகிச்சைக்காக கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதையடுத்து கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்தார்.

ஆஸ்பத்திரியில்  ஸ்டாலின், கனிமொழி, ஆ. ராசா, துரைமுருகன் உள்ளிட்டோர்  இருந்தனர். இதையடுத்து ஸ்டாலினின் கரங்களைப் பற்றிக் கொண்ட ஆளுநர் புரோகித், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார். அப்போது இருவரது கண்களும் கலங்கின. மேலும்  கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில் காவேரி  மருத்துவமனை அருகே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.