மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரசிகருக்காக நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான முரளி என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் தனது கடைசி ஆசையை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்காக நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முரளி.. நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமா இருங்க. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து வீட்டிற்கு வந்துடுவீங்க. நீங்க குணமடைந்து வீட்டிற்கு வந்த பிறகு தயவுசெய்து என் வீட்டிற்கு குடும்பத்துடன் வாங்க. நான் உங்களை பார்க்கிறேன். தைரியமாக இருங்க” எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முரளி, தர்ஷன் என்ற பெயரில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.