மாரிதாஸை கைது செய்யும் அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார்? திமுக குடும்பத்தைப் பற்றி யார் விமர்சனம் செய்தாலும், தற்போதைய சூழலில் உடனடியாக அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்கிறது
திமுக குடும்பத்தைப் பற்றி யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்கிறது என்று தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக அரசை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததற்காக தீவிர வலதுசாரி ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய கைதால் பாஜகவினர் கொந்தளித்து வருகிறார்கள். இதற்கிடையே மாரிதாஸ் போர்ஜரி வழக்கு ஒன்றிலும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு வழக்குகளில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதால், குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் நடிகையும் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மக்கள் பிரச்சினைகளை கேட்டு அறியாமல் முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறார். மாரிதாஸை கைது செய்யும் அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார்? திமுக குடும்பத்தைப் பற்றி யார் விமர்சனம் செய்தாலும், தற்போதைய சூழலில் உடனடியாக அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது என்னென்ன பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப் பார்க்கப் போனால் ஒட்டுமொத்த திமுக குடும்பமும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ளே போக வேண்டும். தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.” என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், “கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ள நிலையில் திமுக அரசு மதுபானக் கடைகளைத் திறந்து வைத்துள்ளது. அதுபோலவே முஸ்லிம், கிறிஸ்துவ மத விழாக்களுக்கு அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் கொரோனா தொற்று பரவாதா? ஆனால், இந்து மத விழாக்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பின்பற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.
