பாஜக – அதிமுக கூட்டணி முறிவதற்கான சூழல் உருவாகி வருவதை அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் பேட்டி தெரிவிக்கும் வகையில் உள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகள் பிறகு ஏற்பட்ட இணைப்புகள் என அனைத்துமே மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆசியோடு நடைபெற்றதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதிமுகவை வழிநடத்துவதே பாஜக தலைமை தான் என்று கூட கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமைந்தது.

போட்டியிட்ட 40 தொகுதிகளில் ஒன்றை தவிர மற்ற 39 தொகுதிகளிலும் பாஜக – அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது.தோல்விக்கு பிறகும் கூட இந்த இரண்டு கட்சிகளிடையே கூட்டணி தொடர்கிறது. ஜெயலலிதா இருந்த போது எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அது தேர்தல் முடிந்தால் முடிந்துவிடும். தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் கூட அதன் பிறகு கூட்டணியை ஜெயலலிதா தொடர மாட்டார்.

 

ஆனால் தற்போது பாஜக கண்டுகொள்ளாமல் இருந்த நிலையிலும் வழிய சென்று ஆதரவு கோரி கூட்டணியை அதிமுக தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை நாங்குநேரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பிரச்சாரத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் பாஜகவுடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பாஜகவுடன் வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமே வைத்துள்ளதாக முனுசாமி தெரிவித்தார். தேர்தல் உடன்பாடு வைத்திருப்பதால் பாஜகவின் அனைத்து கொள்கைகளையும் அதிமுக ஏற்றுக் கொண்டுவிட்டதாக அர்த்தம் இலலை. கொள்கை ரீதியாக பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தடாலடியாக கூறியுள்ளார் முனுசாமி.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்த போது அவருக்கு பக்கபலமாக இருந்தவர் முனுசாமி. பாஜக மேலிடத்துடனும் நல்ல தொடர்பில் இருப்பவர் அவர். ஆனால் திடீரென அவர் இப்படி கூறியுள்ளதற்கு மாறி வரும் அரசியல் சூழல் தான் காரணம் என்கிறார்கள். சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக போடும் கணக்கை புரிந்து கொண்டு முனுசாமி இப்படி பேசி வருவதாகவும் உள்ளாட்சி தேர்தலோடு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் அல்லது விலக்கப்படும் என்பதற்கான அறிகுறி தான் இது என்கிறார்கள்.