ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பசுவின் பாலை விட, கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீருக்கே அதிகவிலை கிடைப்பதாக, அங்குள்ள பால்பண்ணை விவசாயிகள் தெரிவித் துள்ளனர்.

பசுக்களின் சிறுநீர் மருந்துக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்துக்கள் பசுவின் சிறுநீரை புனிதமாகவும் கருதி வருகின்றனர்.

இந்நிலையில ராஜஸ்தான் மாநிலத்தில் பசுவின் பாலைவிட அதன் சிறுநீர் நல்ல விலை போவதமாக கூறப்படுகிறது. அதிலும், நல்ல இனவிருத்தி கொண்ட பசுக்களின் சிறுநீர், ஒரு லிட்டர்ரூ. 50 என்றாலும் மக்கள் வாங்கிச் செல்வதாக பால் பண்ணையாளர்கள்  கூறியுள்ளனர்.

இவ்வாறு கோமியம் லிட்டர் ரூ. 30 முதல் ரூ. 50 வரை விலைபோகும் நிலையில், ஒரு லிட்டர் பாலின் விலைஎன்று பார்த்தால் ரூ. 22 முதல் ரூ. 26 வரைதான் உள்ளது. எனவே, கோமியம் மூலம் 30 சதவிகித அளவிற்குதங்களின் வருவாய் அதிகரித்துள்ளதாக பால் பண்ணை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பூச்சிக் கொல்லி மருந்துக்குப் பதிலாகவும், மதச் சடங்குகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கும் ராஜஸ்தானில் கோமியத்தை அதிகமாக பயன்படுத்துவதால், அதற்கான தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் மருத்துவத்திற்கு கோமியத்தைப் பயன்படுத்துமாறு, அந்த மாநிலத்தின் ஆதித்யநாத் அரசே முன்னின்று பிரச்சாரம் செய்தது.அங்கு ஆயுர்வேத மருத்துவ துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.ஆர். சௌத்ரியும், ‘ஆயுர்வேத மருத்துவத்தில் எட்டு மருந்துகளுக்குக் கோமியம் பயன்படுத்தப்பட்டுள்ளது; இந்த மருந்து, கல்லீரல் நோய்கள், மூட்டுவலி மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாட்டைக் குணமாக்கும் என்பதை நிரூபிக்க முடியும்’ என்று பீதி கிளப்பினார்.

இதையடுத்து தற்போது ராஜஸ்தானிலும் கோமியத்திற்கு மவுசு ஏற்பட் டுள்ளது.