கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர், அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களையும் சொகுசு பஸ்களில் ஏற்றி கொண்டு சென்றனர்.
அவர்களை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் பே எனப்படும் தனியார் விடுதியில் அடைக்கப்பட்டதாக பேசப்படுகிறது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, எம்எல்ஏக்கள் எங்கே அடைக்கப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பினார். மேலும், கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் எம்எல்ஏக்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாமல்லபுரம் டிஎஸ்பி தென்னவன் தலைமையில் போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் இன்று அதிகாலை முதல் கோல்டன் பே ரிசார்ட்டில் ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு அறையாக சென்று அங்கு எம்எல்ஏக்கள் அடைக்கப்பட்டுள்ளனரா, அவர்களுடன் யார் தங்கியுள்ளனர் என விசாரிக்கின்றனர்.
அப்போது, அங்கிருந்த கோவை தெற்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுன், ரிசார்ட்டில் சுதந்திரமாக இருப்பதாகவும், தங்களை யாரும் கடத்தி வரவில்லை என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
