நாட்டையே உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் கேரளா தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அமீரக தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட பார்சல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சோதனையிடப்பட்டது. அப்போது அந்த பார்சலில் ரூ.15 கோடியில் 30 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டது.இந்த விவகாரம் கேரளாவை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கியது. கடத்தலில் கேரள அரசின் தகவல் தொடர்பு துறை மேலாளர் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக காங்கிரஸ் கட்சிகள் போர் கொடி தூக்கியது. முதல்வர் பினராய் விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் பேசப்பட்டது.

ஸ்வப்னா வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். ஆனால் போலீசின் கைகளில் சிக்காமல் தலைமறைவான ஸ்வப்னா பெங்களுரில் கைது செய்யப்பட்டார்.கேரள தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கருக்கும் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தன. ஆகையால் விசாரணை குழு ஒன்றை  தலைமைச்செயலாளர் தலைமையில் முதலமைச்சர் பினராயி விஜயன் அமைத்தார்.

விசாரணை நடத்திய அக்குழு தமது அறிக்கையை அரசுக்கு அளித்தது. அதன் அடிப்படையில் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்