கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 1 கோடி ரொக்கப்பணம், ஏறக்குறைய ஒரு கிலோ தங்க நகைகளை தேசிய புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

ஸ்வப்னா சுரேஷ் தவிர குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதாகியுள்ள சரித் குமார், சந்தீப் நாயர் உள்பட மூவருக்கும் ஆகஸ்ட் 21-ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் என்ஐஏவுக்கு அனுமதியளித்தது.கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த விவகாரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் கைதுசெய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோரை அடுத்த மாதம் 21-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், ஸ்வப்னா சுரேஷின் வங்கி கணக்குகளையும், லாக்கர்களையும் ஆய்வுசெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் ஸ்வப்னா சுரேஷின் தனி லாக்கரை சோதனை செய்ததில் 1 கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.