பிரதமர் மோடி, பிரசாரத்துக்கு வந்தாலும், வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கிவைக்க வந்தாலும்,  வெளிநாட்டுத் தலைவர்களுடன் விழாவை சிறப்பிக்க வந்தாலும்  #GoBackModi மற்றும் #TNWelcomesModi என்கிற இரு துருவ ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. சில நேரங்களில் #GoBackModi என்கிற ஹாஷ்டேக், உலக அளவில் டிரெண்டாகும். தற்போது இந்த இரு ஹாஷ்டேக்களும் இந்திய அளவில் டாப் டிரெண்டிங்கில் உள்ளன. இந்நிலையில் #TN_welcomes_XiJinping என ஸி ஜின் பிங்கை வரவேற்கும் ஹேஸ்டேக்கையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். நாளை வரை மோடி - ஜின்பிங் சந்திப்பு நடக்கும் என்பதால் சீக்கிரமே உலக டிரெண்டிங்கிலும் இரு ஹாஷ்டேக்களும் வர வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீன இடையே கடும் வார்த்தை போர் நடுந்து வரும் நிலையில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். பிரதமர் மோடிக்கும் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 2018ல் சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 

இரண்டு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜி ஜின்பிங் இடையிலான முக்கிய ஆலோசனை சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது, எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாது என்றும், சந்திப்பு குறித்த எந்த கூட்டு அறிக்கைகளும் வெளியிடப்படாது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிக உயர்ந்த மட்டத்தில் தொடர்புகளை உருவாக்குவதும், முக்கிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் இதன் நோக்கம் என்று அவர்கள் கூறினர்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இன்று மதியம் 1.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். முன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி  சென்னைவருகிறார். அர்ஜுனனின் தவசு, பஞ்ச ரதாஸ் மற்றும் கடற்கரை கோயில் ஆகிய மூன்று தளங்களின் புராதன நினைவுச் சின்னங்களைச் பிரதமர் மோடி சீன அதிபருக்கு சுற்றி காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.