முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவ ஜி.கே.மூப்பனாரின் சகோதரரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் சித்தப்பாவான ரெங்கசாமி மூப்பனார் இன்று சென்னையில் காலமானார். 

ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். 85 வயதான அவர், சிகிச்சை பலனின்றி ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவிலில் ரெங்கசாமி மூப்பனார் உடல், நாளை பிற்பகல் 5 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது. 

ரெங்கசாமி மூப்பனார் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மிகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவரான கபிஸ்தலம் மூப்பனார் குடும்பத்தை சேர்ந்தவர். ரெங்கசாமி மூப்பனார் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் உள்ள சிறு கிராமமான கவித்தலத்தில் அரசியலிலும், ஆன்மீக பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு, ஆண்டாள் என்ற மகள் உள்ளார். இவர் உலக புகழ்பெற்ற திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை நடத்தும் தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவராக பதவி வகித்து வந்தவர். பாரதியார் பேரவையின் தலைவராக இருந்து பாரதியை பற்றி பட்டிமன்றம், பாரதியார் பாடல் கச்சேரிகளையும் தொடந்து நடத்தி புகழ் பெற்றவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். ரெங்கசாமி மூப்பனாரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.