பாதிக்கப்பட்ட அயனாவரம் மாற்று திறனாளிச் சிறுமிக்கு, மனநல ஆலோசனைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனே  வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் 11  வயது செவித்திறனற்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி முன் முறையிட்டார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்றே மனநல மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், சிறுமியை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்க வேண்டிய நடவடிக்கையை தொடங்க, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.

சிறுமிக்கு தேவையான மனநல ஆலோசனை மற்றும் அவரது பெற்றோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அயனாவரம் சிறுமி வழக்கு மட்டுமில்லாமல், இதுபோன்ற அனைத்து வழக்குகளிலும் நீதிநிலை நாட்டப்பட வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறிப்பிட்டார்.