காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து, குலாம் நபி ஆசாத் நீக்கப்பட்டுள்ளார்,இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குலாம் நபி ஆசாத்க்கு முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

காங்கிரஸ்க்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும்; கட்சியின் காரிய கமிட்டியில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனக்கோரி, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு, கட்சியின் பொதுச் செயலராக இருந்த குலாம் நபி ஆசாத் உட்பட, 23 தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களை கடுமையாக கண்டித்தார் ராகுல்.

இந்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டியை, இடைக்கால தலைவர் சோனியா மாற்றி அமைத்துள்ளார். இது பற்றி, காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்..."காங்கிரஸ் பொதுச் செயலர்களாக இருந்த குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மோதிலால் வோரா, லுசின்ஹோ பலிரியோ, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக, குலாம் நபி ஆசாத் நீட்டிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினர்களாக, சிதம்பரம், ஜிதேந்திர சிங், தாரிக் அன்வர், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக, தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், கூடுதலாக, புதுச்சேரி, கோவா மாநில பொறுப்பாளராகவும் இருப்பார்.

தமிழகத்திற்கான பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக், மத்திய பிரதேச மாநில பொறுப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக, தமிழக எம்.பி., மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநில பொறுப்பாளராக, தமிழக எம்.பி., செல்லகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.சிறப்புக் குழுகாரிய கமிட்டியின் நிரந்தர சிறப்பு அழைப்பாளராக, ஜிதின் பிரசாதா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலராக உள்ள ஜிதின் பிரசாதா, உத்தர பிரதேச மாநில பொறுப்பாளராக இருந்தார். இப்போது, விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் மேற்கு வங்க மாநில பொறுப்பாளராக மாற்றப்பட்டுஉள்ளார்.

கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக, மதுசூதன் மிஸ்த்ரி, ராஜேஷ் மிஷ்ரா, கிருஷ்ணா பைரே கவுடா, ஜோதிமணி, அர்விந்த் சிங் லவ்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவருக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில், ஏ.கே. அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.