பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற திமுக பொதுக்குழு எவ்வித காரமும் இல்லாமல் சப்பென்று முடிந்து போனது திமுக தொண்டர்களுக்கு மட்டும் அல்ல நிர்வாகிகளுக்கும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதமே திமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் திமுகவிற்கு புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற அவசரம் தான். காரணம் தற்போதைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பு காரணமாக சிரமப்பட்டு வருகிறார். அவருக்கு நினைவு கிட்டத்தட்ட தப்பிவிட்டதாக சொல்கிறார்கள். திமுகவில் தலைவருக்கு நிகரான அதிகாரம் பொதுச் செயலாளர் பதவிக்கு உண்டு. ஒருவரை கட்சியில் சேர்க்க வேண்டும் இல்லை நீக்க வேண்டும் என்றால் பொதுச் செயலாளரின் ஒப்புதல் அவசியம்.

இதே போல் கட்சியை தினசரி நிர்வகிக்கவும் பொதுச் செயலாளரின் அனுமதி அவசியம். இந்த அளவிற்கு மிக முக்கியமான பதவி பேராசிரியரிடம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கலைஞரின் மிக நெருக்கமான நண்பர். திமுகவின் மிக மூத்த நிர்வாகி போன்ற காரணங்களால் அந்த பதவியில் அன்பழகன் தொடர்ந்து இருந்து வருகிறார்.

கடந்த 2001ம் ஆண்டு திமுக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்த போது ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா மிக முக்கிய அமைச்சர் பதவி அதிமுகவில் மிக முக்கிய பதவி என்று ஆசைகாட்டி அன்பழகனை அதிமுகவில் இணைக்க முயற்சி செய்தார். ஆனால் தான் சாகும் போது தன் உடல் மீது திமுக கொடி தான் போர்த்தப்பட வேண்டும் என்று அதிமுகவின் தூதருக்கு பதில் அளித்து திருப்பி அனுப்பினார் அன்பழகன்.

இதன் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது அதுவரை தான் வைத்திருந்த நிதித்துறையை அன்பழகனுக்கு கொடுத்து அழகு பார்த்தார் கலைஞர். பிறகு 2011ம் ஆண்டு தோல்விக்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து அன்பழகன் விலகினார். 2016 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இருந்தாலும் பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்கிறார்.

இதற்கிடையே நினைவு தப்பிய பேராசிரியரிடம் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி இருப்பது கட்சியின் நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் கருதினார். இதனை தொடர்ந்து பொதுச் செயலாளராக வேறு ஒருவரை நியமிக்க அவர் முடிவெடுத்தார். இதற்கு பேராசிரியரும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்ததாக கூறினார்கள். இதன் பிறகே செப்டம்பர் மாதம் திமுக பொதுக்குழுவுக்கான அறிவிப்பு வெளியானது.

ஆனால் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் புதிதாக பொதுச் செயலாளராக துரைமுருகன் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரைமுருகனும் உடல் நிலை குன்றிய நிலையில் உள்ளார். கடந்த வாரம் கூட அப்பலோவில் சிகிச்சைக்கு சென்று வந்தார். இதனால் வேறு ஒருவரை பொதுச் செயலாளர் ஆக்கலாம் என ஸ்டாலின் கடைசி நேரத்தில் மனம் மாறிவிட்டதாக கூறுகிறார்கள்.

பொதுக்குழுவிற்கு முதல் நாளில் கே.என்.நேரு திமுக பொதுச் செயலாளர் ஆகப்போவதாக தகவல் வெளியானது. பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேருவுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர். ஆனால் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவிக்கு யாரையும் முன்னிலைப்படுத்தாமல் ஸ்டாலின் அமைதிகாத்துவிட்டார். இதற்கு காரணம் பொதுச் செயலாளர் பதவிக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்பது தானாம்.