தமிழகத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கலாமா? என்பது குறித்து மருத்துவநிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தினசரி பாதிப்புகள் 1,500க்கும் கீழ் குறைந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,464 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 7,76,174ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் குணமான நபர்களின் எண்ணிக்கை 1,797ஆக பதிவாகியுள்ளது. இதையொட்டி மொத்த எண்ணிக்கை 7,53,332ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 11,669 பேர் பலியாகி இருக்கின்றனர். அதில் புதிதாக 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 11,173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் 1.2 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் 28.11.2020 அன்று  மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலை, இரண்டாம் அலைக்கான வாய்ப்பு, டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் சூழல் இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். முன்னதாக டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கடந்த 25ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.அதில் பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.