3 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு போன்றவற்றால் இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும், எனவே புதியக்கல்விக்கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் 
பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளதாவது:-34 ஆண்டுகளுக்கு பிறகு புதியகல்விக்கொள்கை அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இதில் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. தாய்மொழிக்கல்வி மூலம்தான் வாழ்க்கைகல்வியை உணர்த்தும் என்பதால் 10 ஆம் வகுப்புவரை தாய்மொழிக்கல்வி கட்டாயமாக்கிட வேண்டும். இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்காக 6 சவீதம் ஒதுக்கப்படுவது வரவேற்புக்குரியது. 

3,5,8 ஆகிய வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்பது பிஞ்சுகளிடத்தில் நஞ்சுப்பாய்ச்சுவதாகும். மேலும் அரசுப்பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளும். கிராமப்புற மாணவர்களின் பள்ளிக்கல்விக்கு முடிவு கட்டுவதாகும். 6 ஆம் வகுப்பிலே தொழில்கல்வி என்பது மீண்டும் குலகல்வி முறைக்கு கொண்டுபோய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இருமொழிக் கொள்கையே தொடரவேண்டும். ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கு பிறகு நேர்முகத்தேர்வு அவசியமற்றது. அது முறைகேடுகளை ஊக்குவிக்கும். ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் கல்வி நிலைய உயர்பதவிக்கு திறமை, ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது  இனி சாதி ரீதியாக வேண்டியவர்கள், வசதிவாய்ப்புள்ளவர்கள் தான் உயர்பதவிக்கு வரமுடியும். அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை தன்னாட்சி வழங்குவது நல்லது. ஆனால், தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம்  இணைப்பு பெற்று அவற்றின் மேற்பார்வையில் செயல்படாவிட்டால் முறைகேடுகளுக்கு வித்திடுவதாகும். 

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக இளங்கலை மாணவர் சேர்க்கைகளுக்கு பொது நுழைவுத்தேர்வு என்பது  கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு  கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும். நீட் தேர்வு போன்ற பாதிப்பு ஏற்படும். கல்லூரி படிப்பும் கனவாகிப்போகும். கல்வி மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவந்தால் தான் மாநில சூழலுக் கேற்ப வடிவமைக்கமுடியும். எனவும் 2019 தேசியக்கல்விக் கொள்கை வரைவுத்திட்ட அறிக்கை வெளியிட்டு கருத்துகேட்டபோது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட கல்வியாளர்களின் கருத்துகள் வழங்கியதை பரிசீலிக்காதது வருத்தத்திற்குரியது எனவும் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது, மேலும்,  புதியக்கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் போது நீக்கப்படவேண்டியவைகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசை வலியுறுத்த ஆவணசெய்யும்படி மாண்புமிகு. முதல்வர்  அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பணிவுடன் வேண்டிக்கொள்கிறது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.