தி.மு.க பொதுக்குழு கூடுவதற்கு முன்னதாக தனது மகனுக்கு சரியான ஒரு பதவியை கொடுக்கவில்லை என்றால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று மு.க.அழகிரி குடும்பத்தினரிடம் தெளிவாகி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கலைஞர் மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தினந்தோறும் கோபாலபுரம் வந்துவிடுகிறார். இதே போல் கலைஞரின் மூத்த மகள் செல்வியும் கோபாலபுரத்திலேயே அதிக நேரம் இருக்கிறார். கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.கவில் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் அளவிற்கு செல்வியும் மிகவும் கவனமாக காய் நகர்த்தி வருகிறார். தற்போதைய சூழலில் தி.மு.கவின் ஒற்றுமை மற்றும் ஸ்டாலின் இமேஜை காக்கும் பொறுப்பு செல்வியிடம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

கலைஞர் மறைவுக்கு பிறகு மீண்டும் தி.மு.கவில் ஆதிக்கம் செலுத்த அழகிரி தயாராகி வருகிறார். ஆனால் இந்த முறை அழகிரி கட்சியில் தனது மகன் துரை தயாநிதியை முன்னிலைப்படுத்த முயற்சித்து வருகிறார். இது குறித்து தனது சகோதரி செல்வியிடமும் அழகிரி மனம் விட்டு பேசியுள்ளார். என்னை பொறுத்தவரை மத்திய அமைச்சர் என்ற உயரமே போதுமானது. இனியும் தி.மு.கவில் பொறுப்புக்கு வந்து நான் எதையும் பெரிதாக சாதித்துவிடப்போவதில்லை. ஆனால் என் மகன் நிச்சயம் தி.மு.கவில் மிக உயரத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ? அதனை நான் செய்வேன் என்று அழகிரி செல்வியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பொதுக்குழு கூடுவதற்கு முன்னதாக என் மகனுக்கு தி.மு.கவில் பொறுப்பு எதையும் கொடுக்கவில்லை என்றால் நான் அடுத்ததாக என்ன செய்வேன் என்பதை யாராலும் கணிக்க முடியாது. மேலும் என்னை அந்த சமயத்தில் யாராலும் கட்டுப்படுத்தவும் முடியாது என்றம் செல்வி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து கடந்த வெள்ளியன்று இரவு நீண்ட நேரம் கோபாலபுரம் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றுள்ளது. நிச்சயமாக அழகிரியின் மகன் துரைக்கு கட்சியில் நல்ல பதவியை கொடுக்க வேண்டும் என்று செல்வி ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஸ்டாலினோ தி.மு.க என்றால் இனி தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும். கனிமொழியும் தற்போதைக்கு மகளிர் அணி என்ற அளவில் இருப்பதோடு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் உள்ளார்.

மீண்டும் அழகிரியை கட்சிக்குள் அனுமதிப்பது என்பது வேலியில் போகும் ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்டுக் கொண்ட கதையாகிவிடும் என்று ஸ்டாலின் கருதுகிறார். கட்சியின் சில மூத்த தலைவர்களும் ஸ்டாலினிடம், அழகிரிக்கு எதிராகவே பேசி வருகின்றனர். ஆனால் செல்வி தான் அழகிரியை தற்போதைக்கு சாந்தப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் நமது இமேஜை டேமேஜ் செய்துவிடுவார் என்று ஸ்டாலினிடம் கூறியுள்ளார். என்ன தான் செல்வி எடுத்துக் கூறினாலும், ஸ்டாலின் எப்படியாவது அழகிரியை கட்சிக்குள் அண்டவிடக்கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பதாகவும், இதற்காகவே அவசரஅவசரமாக செயற்குழு கூட்டப்பட்டுள்ளதாகவும் தி.மு.க வட்டடாரங்களில் பேச்சு பலமாக உள்ளது. அதே சமயம் அழகிரியும் தி.மு.கவில் தனது மகன் துரைக்கு நல்ல பதவி கொடுக்கப்படவில்லை என்றால் அடுத்தடுத்து கொளுத்துவதற்கு தற்போதே பட்டாசுகளை தயார் செய்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.