’அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில்’ எனும் ஒற்றை வரியை கூறி, ஒட்டுமொத்த இந்துக்களின் சாபத்தையும், வருத்தத்தையும் ஒன்று சேர வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் எம்.பி. திருமாவளவன்.  இவரது பேச்சுக்கு எதிராக சோஷியல் மீடியாவில் கருத்துக்களும், விமர்சனங்களும் பற்றி எரிகின்றன. பல வி.ஐ.பி.க்களும் திருமாவை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் பல வி.வி.ஐ.பி.க்கள் திருமாவின் கருத்தை ஆமோதித்து, அதற்கு வலுவும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 
ஆனால் நடிகையும், நடன இயக்குநரும், பா.ஜ.க. பிரமுகருமான காயத்ரி ரகுராமோ சில படிகள் மேலே போய் ‘இந்துக்களை இழிவாக பேசிய திருமாவளவனை பார்த்த இடத்திலெல்லாம்....அடிக்க வேண்டும்.’ என்று ட்விட்டரில் கொளுத்திப் போட, பற்றி எரிய துவங்கிவிட்டது பக்கவாட்டுப் பிரச்னை. 


இதற்கு டெல்லியிலிருந்து திருமாவோ  ஒரு வீடியோ பேட்டி கொடுத்து, அதில் காயத்ரியை வெளுத்து வாங்கிவிட்டார் பூடகமாக. இந்துக்களுக்கு எதிராக திருமா பேசிய விவகாரம் ரூட் மாறி, திருமாவுக்கு எதிராக மோசமாக திட்டுவதும், பதிலுக்கு திருமா பகீர் வார்த்தைகளில் விமர்சிப்பதுமாக போய்க் கொண்டிருக்கிறது விவகாரம். இந்த நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தில் பேசியிருக்கும் காயத்ரி...”இந்து கோயிலை பற்றித் திருமா பேசியது அவருடைய சொந்த கருத்து என்றால், அவரைப் பற்றி நான் பேசியதும் எனது சொந்த கருத்து என்று ஏற்க வேண்டும். அல்லது நேர்மையாக என்னுடன் வாதம் செய்ய வேண்டும். அதைவிடுத்து, என் மூஞ்சியில் ஆசிட் அடிப்பேன், என்னை கொலை செய்வேன்! என்று அவர் கட்சிக்காரர்கள் ரெளடித்தனம் செய்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளென்பது கட்சியா அல்லது ரெளடிகள் கூடாரமா?


அதனால்தான் தைரியம் இருந்தால் 27-ம் தேதி மெரினாவில் என்னை நேருக்கு நேர் சந்தியுங்கள்! என்று சவால் விட்டேன். இப்போது ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் திருமாவளவனா இப்படிப் பேசியிருக்க முடியுமா? நான் திருமாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்! என்கிறார்கள். நான் சொல்கிறேன், திருமா பேசிய பேச்சுக்கு அவர்தான் இந்து மக்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். நான் மன்னிப்பு கேட்பதெல்லாம் செத்தாலும் நடக்காது.” என்றிருக்கிறார். காயத்ரி மீண்டும் ஆடியிருக்கும் ஆத்திர கதகளிக்கு எதிராக பொங்க துவங்கிவிட்டனர் மீண்டும் வி.சி.க.வினர். ஆக, இந்த கதை இப்போதைக்கு முடியாது போல!