நடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுபவர்கள் என திருமாவளவன் கூறியதாகவும், ஆனால் தாங்கள் ஆடைகளை கழற்றுபவர்கள் அல்ல காலில் உள்ளதை கழற்றுபவர்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மனு தர்மத்தின் பெயரால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவாக பேசிய சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் மகளிரணி சார்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பாஜகவில் ஐக்கியமாகியுள்ள நடிகைகள் கௌதமி, காயத்ரி ரகுராம், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவனின் உருவபொம்மை எரிக்கப்பட்டு, சாவு மணி, சங்கு ஊதப்பட்டது. பெண்கள் குறித்து திருமாவளவன் பேசியது வெட்கக்கேடான ஒரு கொடுமையான செயல் என்று கவுதமி கூறினார்.மேடையில் பேசிய நடிகை காயத்திரி ரகுராம், நடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுவார்கள் என திருமாவளவன் கூறுவதாகவும் ஆனால் தாங்கள் ஆடைகளை கழற்றுபவர்கள் அல்ல காலில் உள்ளதை கழற்றுபவர்கள் என ஆவேசமாக தெரிவித்தார். 

திருமாவளனுக்கு கெட்ட நேரம் நெருங்கிவிட்டதாகவும் அவர் ஜெயிலுக்கு போகப்போவதாகவும் காயத்ரி கூறினார். கடந்த ஆண்டே தான் நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்தபோது பயந்து அமெரிக்காவில் போய் திருமாவளவன் ஒளிந்து கொண்டார் என்றும் காயத்ரி ரகுராம்  கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். காயத்ரி ரகுராம் காலில் உள்ளதை கழற்றுபவர்கள் என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.