கெளரி லங்கேஷின் உடலை துளைத்த தோட்டாக்கள், இந்த தேசத்தில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையையும் சேர்த்தே சிதைத்திருக்கின்றன...

கர்நாடகாவின் சென்சேஷனல் பத்திரிக்கையாளர்களில் ஒருவரான கெளரி லங்கேஷ் சில மணித்துளிகளுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் மட்டுமில்லை, தியேட்டர் ஆர்டிஸ்ட் மற்றும் இயக்குநர் என பன்முக ஆளுமையுடையவர். 

கடந்த 2008_ம் ஆண்டில் தான் நடத்தி வந்த ஒரு சிறு பத்திரிக்கையில் பா.ஜ.க. எம்.பி. பிரகலாத் ஜோஷி மற்றும் சில பா.ஜ.க. தலைவர்கள் சேர்ந்து ஒரு சீட்டிங்கில் ஈடுபட்டதாக ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டார். இதற்காக ஜோஷி தொடர்ந்த வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

இவர் கம்பி எண்ணப்போவதை காண ஜோஷி ஆவலாய் இருக்க, இவரோ முன் ஜாமீன் வாங்கிக் கொண்டு தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்தார். 

பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்துக்கு எதிராக பயன்படுத்தப்படும் ‘மான நஷ்ட வழக்கு’ எனும் பதத்தை மிக கடுமையாக எதிர்த்தவர் கெளரி. பா.ஜ.க. முக்கியஸ்தர்களுக்கு எதிராக தான் எழுதிய சாடல் கட்டுரைகள் பல வற்றுக்கு ஆதாரம் காட்ட மறுத்தார். கேட்டபோது ‘என்னால் என் சோர்ஸை காட்டிக் கொடுக்க முடியாது.’ என்று தர்மம் பேசினார். 

55 வயதான கெளரி லங்கேஷ் கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்த வகுப்புவாத சக்திகளின் ஹிட் லிஸ்டில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இவரது அப்பா லங்கேஷ், ஒரு கவனத்துக்குரிய எழுத்தாளர். 

இவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று இரவு பெங்களூரு ராஜேஷ்வரி நகரில் தனது வீட்டுக்கு அருகில் அடையாளம் தெரியாத மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். மிக நெருக்கமாக வந்து சுட்டுவிட்டு தப்பியிருக்கின்றனர். 

ஒரு சீனியர் பத்திரிக்கையாளருக்கே இந்த நிலையென்றால் இந்த தேசத்தில் சகிப்புத்தன்மை செத்துவிட்டது என்பதே அர்த்தம்!....என்று இந்த நிகழ்வை மிக கடுமையாக விமர்சிக்கிறார்கள் பார்வையாளர்கள்.