சென்னையை பொருத்தவரையில் கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இச்செயல்பாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அனுமதி தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும், அமைப்புகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுமையாக தடை செய்யப்படுகிறது. 

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாட்டில் தற்போது வரும் பண்டிகை காலங்களில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களின் போது மக்கள் அதிக அளவில் கூடியதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டில் வருகிற 15-9-2021 வரை கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. 

தற்போது கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமய விழாக்களை முன்னிட்டு மதச் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமயம் விழாக்களை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லத்தில், வெளியில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் தனி நபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரையில் கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இச்செயல்பாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. 

மேற்குறிப்பிட்ட அனுமதி தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும், அமைப்புகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுமையாக தடை செய்யப்படுகிறது. தனி நபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களில் வெளிப்புறத்திலும், சுற்றுப்புறத்தில் வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறையால், தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கட்டுப்பாடு மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.