மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் மீது சென்னை அசோக்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழீன படுகொலையின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை அசோக்நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மே 18-ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திருமாவளவன், ஈழத்தமிழர் பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள தமிழ் அமைப்புகள், இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள், உலகம் எங்கும் பரவி கிடக்கும் தமிழ் அமைப்புகள் இடையே ஒருங்கிணைந்த செயல்திட்டம் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், பாஜகவின் சமாதன கொள்கையில் தீவிர எதிர்ப்பு கொண்டதால் தான் நான் கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்தேன். கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதற்கு ஒருபடி மேல் சென்று பயங்கரவாதி என்று கூறியிருக்க வேண்டும். காந்தியும் ஒரு இந்து தீவிரவாதி தான். அவர் மூச்சுக்கு 300 முறை ஹேராம் என்பார். அவருக்கு முற்பிறவி, கர்மவினை மீது நம்பிக்கை உண்டு. கர்மவினை மீது யார் நம்பிக்கை கொண்டாலும் அவர் ஒரு இந்து தீவிரவாதி தான். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என்று பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. 

இந்நிலையில், இந்து முன்னணி தலைவர் வி.ஜே.நாராயணன் அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் போலீசார் திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.