புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.  இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதால் ஹெலிகாப்டரில் சென்றேன். ஹெலிகாப்டரில் சென்றதால்தான் புயல் பாதிப்பு முழுமையாக பார்வையிட முடிந்தது என தெரிவித்துள்ளார். 

கஜா புயல் கடந்த வாரம் நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் 6 மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் பெருத்த சேதம் ஏற்பட்டது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. உயிர் சேதமும் மற்றும் பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

கஜா புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைத்தார். அவருடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தம்பிதுரை உடன் இருந்தனர். புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் வைத்தார். 

பின்னர் முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களிடம் கூறுகையில்;- பிரதமரிடம் சேத மதிப்பு குறித்த மனு அளிக்கப்பட்டு உள்ளது, இடைக்கால நிவாரணமாக ரூ 1500 கோடி உடனடியாக வழங்க கோரிக்கை வைத்து உள்ளோம். நிரந்தர நிவாரணமாக ரூ. 15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆய்வு நடத்த விரைவில் மத்திய குழு வரும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளார். 

நிவாரண பணிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். குறிப்பாக மின்சார ஊழியர்கள் உயிரை துச்சம் என நினைத்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தி.மு.க அரசை விட அ.தி.மு.க அரசு நிவாரண தொகையை அதிகம் வழங்குகிறது என்றார். புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதால் ஹெலிகாப்டரில் சென்றேன் என கூறியுள்ளார். ஹெலிகாப்டரில் சென்றதால்தான் புயல் பாதிப்பு முழுமையாக தெரிவந்துள்ளது. மேலும் சாலை வழியாக சென்ற ஸ்டாலின் எத்தனை இடங்களுக்கு சென்று புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார் கேள்வி எழுப்பியுள்ளார்.