கஜா புயல் நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய நிதி பதினைந்தாயிரம் கோடி. அதில் முதல் கட்டமாக, உடனடியாக ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாயை ஒதுக்கச் சொல்லியும் கோரியுள்ளார்கள். பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டிருக்கும் மத்திய குழுவின் அறிக்கையை பொறுத்து நிதியை வழங்கும் டெல்லி. 

இந்நிலையில், வந்து சேரும் நிவாரண நிதியை கைப்பற்றுவதில் ஒவ்வொரு துறைக்கும் இடையில் பெரும் போட்டியே ஏற்பட்டுள்ளதாம். காரணம், கஜாவால் களேபரப்படுத்தப்பட்டு கிடக்கும் பகுதிகளில் எல்லா துறைகளின் முழு மூச்சு பங்களிப்பும் அவசியம். பொதுப்பணித்துறை, கல்வித்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை என எல்லா துறைகளை சார்ந்த உள்கட்டமைப்பு விஷயங்களும் அங்கே சிதைத்து சின்னாபின்னமாக்கப் பட்டுள்ளது. எனவேதான் இந்த போட்டி. 

இந்நிலையில் தமிழக அரசு கோரியிருக்கும் முதல் கட்ட நிதியானது ஆயிரத்து ஐநூறு கோடியாக இருக்க, தமிழக மின்வாரிய துறை அமைச்சரான தங்கமணி உதிர்த்திருக்கும் ஒரு வார்த்தையானது அத்தனை அமைச்சர்களையும் அலற வைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மானுவகாட்டுப்பாளையத்தில் பேசிய தங்கமணி “மத்தியரசிடம் தமிழக அரசு பதினைந்தாயிரம் கோடியை நிவாரண நிதியாக கேட்டுள்ளது. அதில் 1500 கோடியை முதல் கட்டமாக வழங்கிடவும் கோரியுள்ளார் முதல்வர். 

ஆனால் பாருங்கள் மின்சார வாரியத்திற்கே சுமார் ஆயிரத்து ஐநூறு கோடி தேவைப்படுகிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில், மின் கம்பங்கள், மின்சார மாற்றிகள், வொயர்கள், மின்சார கோபுரங்கள் என்பதில் துவங்கி மின் நிலையங்களில் முக்கிய உபகரணங்கள் வரை மிகப்பெரிய பாதிப்பு நிகழ்ந்துள்ளது. அவற்றை சரி செய்து, பழைய நிலைக்கு  கொண்டு வந்திட  இந்த தொகை தேவைப்படுகிறது. 

மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு இருநூறு கோடிகள் ஒதுக்கியுள்ளது. இதை வைத்து பணிகள் துரிதமாக நடக்கின்றன.” என்று விளக்கி வைத்தார். இதுதான் மற்ற அமைச்சர்களுக்கு பியூஸ் பிடுங்கியது போல் ஆகிவிட்டது என்கிறது கோட்டை வட்டாரம். ஒட்டுமொத்த முதற்கட்ட நிதியான ஆயிரத்து ஐநூறு கோடிக்கு நிகரான தொகையை மின்சார வாரியத்துக்கு மட்டுமே கேட்கிறாரே தங்கமணி! நிச்சயம் நம் அரசு கேட்டிருக்கும் பதினைந்தாயிரம் கோடியை விட குறைவாகத்தான் மத்தியரசு ஒதுக்கும். 

அந்த முழுமையான தொகையில் இவ்வளவு பெரிய சதவீதம் இவரது துறைக்கே போய்விட்டால், நாம் சார்ந்திருக்கும் மற்ற துறை சீரழிவுகளை எப்படி சீர்செய்வது? முதல்வரின் நெருங்கிய உறவினர் வேறு ஆயிற்றே தங்கமணி, அவர் துறையை விட்டுக் கொடுக்க மாட்டாரே முதல்வர்! அப்படியானால் நம் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி குறைந்தால் எப்படி  தேவைகளை சந்தித்து சரி செய்வது?” என்று புலம்புகிறார்களாம். அவ்வ்வ்!.