கஜா புயல் நிவாரணப்பணிக்கு ஒரு மாத ஊதியத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். நவம்பர் மாத ஊதியம் ரூ.3.5 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதுவரை 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3.50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 

இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். பல்வேறு சினிமா திரையுலகினரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். அதேபோல் லாட்டரி மார்ட்டின் ரூ.5 கோடி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், டிவிஎஸ், சரவணா ஸ்டார் அண்ணாச்சி, திமுக, அதிமுக ஆகியவை தலா ஒரு கோடி நிதி அளித்துள்ளனர். கேரள மாநில அரசு கஜா புயல் பாதித்த தமிழகத்திற்கு ரூ.10 கோடி நிவாரண உதவி அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் கஜா புயல் நிவாரணப் பணிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.