கதறக் கதற கடந்து சென்ற கஜா புயலால் அதிகம் சேதாரமாகியிருப்பது நாகையா? தஞ்சையா? வேதாரண்யமா?...என்று கேட்பவர்களுக்கு, அரசியல் விமர்சகர்கள் சொல்லும் பதில்...’அநியாயத்துக்கு சேதாரமாகியிருப்பது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிதான். கஜா கால் வைத்த மாவட்டங்களில் மட்டுமில்லை. ஒட்டுமொத்த தமிழகமும் உறுமிக் கொண்டுதான் உள்ளது, அரசுக்கு எதிராக.

என்கிறார்கள். காரணம் என்ன? என்று கேட்டபோது எமோஷனல் சூழ்நிலையில், அமைச்சர்கள் கொட்டிய அலட்சிய, அதிகப்பிரசங்கித்தன மற்றும் அமில நிகர் வார்த்தைகள்தான்.’ என்கிறார்கள். கஜா புயலுக்குப் பின் தமிழக அமைச்சர்கள் உதிர்த்த அந்த அமில வார்த்தைகளின் பொளேர் தொகுப்பு இதோ...

 

‘தண்ணீர் பிரச்னை இப்போ நமக்கு தீர்ந்திருச்சு. அதனால இன்னும் புயல் வரட்டும்!’: வனத்துறை அமைச்சர். (இதற்கு, அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரனோ ’ஊரே பத்தி எரியுது. இந்த நேரத்துல சிகரெட்டுக்கு நெருப்பு கேட்ட மாதிரி பேசியிருக்கார் திண்டுக்கல் அமைச்சர்’ என்று நக்கல் விமர்சனத்தை தட்டியுள்ளார்.) ’பல அதிகாரிகளின் தலைமையில் பல குழுக்கள் அனுப்பப்பட்டதால் இன்று கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. காஜா.

புயல் கூஜா புயலாக ஆகிவிட்டது.” : பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. (கஜா புயல் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட, அழைக்கப்பட்ட புயலைக்கூட ‘காஜா புயல்’ என்று இவர் பெயர் மாற்றியது, ஒரு அமைச்சராக இருந்தும் கூட சேதங்களை பற்றி முழு விபரமும் அறியாமல் பேசியதும் மக்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது.) 

“ஒழுங்கா மரியாதையா பேசு! நானென்ன வெச்சுக்கிட்டா இல்லேன்னு சொல்றேன், வரும் நிவாரணம். நீ போ!”: அமைச்சர் ஓ.எஸ்.மணியன். 
(தன் செக்யூரிட்டி ஆபீஸருடன் பைக்கில் இவர் தப்பிய காட்சிகள் தேசம் முழுக்க சப் டைட்டிலுடன் சக்கைபோடு போட்டு அமைச்சரவையை அசிங்கப்படுத்திக் கொண்டுள்ளன. 

“உன் வீட்டுல மட்டுமா சேதாரம், எனக்கும்தா........”அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யான மாஜி அமைச்சர் வைத்திலிங்கம். (மக்களை நோக்கி கடும் ஆவேசத்துடன் இவர் அசிங்கமான, அருவெறுப்பான, வெளியிட தகாத வார்த்தைகளை உதிர்த்திருப்பதாக வீடியோ பதிவுகள் வைரலாகியுள்ளன.) 

இதுவெல்லாம் போதாதென்று...தமிழகத்தின் ஒரு பகுதியே தண்ணீரிலும், கண்ணீரிலும் மிதந்து கொண்டிருந்த வேளையில் அங்கே செல்லாமல், சேலத்தில் சாதாரண நிகழ்ச்சிகளில் ரெண்டு நாட்கள் பங்கேற்றுவிட்டு பின் மெதுவாக டெல்டா சென்றதோடு, ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார் முதல்வர். புயல் பாதித்த பகுதிகளுக்கு செல்ல ஏன் தாமதம்? என்று அவர் கூறிய வீடியோவும் வைரலாகி சாபத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டுள்ளது.

 

அந்த வீடியோவில்...“பல்வேறு நிகழ்ச்சிகளை இங்கே (சேலத்தில்) ஏற்பாடு செய்துவிட்டார்கள். காலநேரம் போதாது என்கிற காரணத்தினால் இன்று அங்கே செல்வதை தவிர்த்து செவ்வாய் கிழமை காலையில் நேரமாக சென்று பார்வையிட இருக்கின்றேன்.!” என்று சொல்கிறார். முதல்வரும் அமைச்சர்களும் இப்படி கேமெரா கண்கள் விழுங்க விழுங்க,  பேசிவைத்திருப்பதால் மக்களின் முழு அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். இப்போது புரிகிறதா கஜாவால் அதிகம் சேதாரமாகியிருப்பது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிதான்! என்பது? என்கிறார்கள் விமர்சகர்கள்.