இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழகத்தில் தற்போது ஒரு வார காலமாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவது மிகுந்த மனநிறைவை தருகிறது. இருந்து போதிலும் மக்களிடையே இன்னமும் கொரோனா பற்றிய பயம் இல்லாமலும், தனிமனித இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் பொது இடங்களில் நடமாடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பல்வேறு தளர்வுகளை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து சில கோட்பாடுகளுடன் அரசு பேருந்து போக்குவரத்தை தொடங்கியது.
அதேபோல், தற்போது தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. பேருந்தில் அதிகம் பேர் பயணம் செய்தால் தொற்று ஏற்படும் என்பதற்காக குறைந்த அளவு பயணிகளும், தனிமனித இடைவெளியுடனும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அரசால் அறிவுறுத்தப்பட்டது. பேருந்து நடத்துநர் கரோனா கோட்பாடுகளுடன் பயணிகளை சானிடைசர் அளித்து பயணிகளை பேருந்தினுள் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது அனைத்து விதிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான பயணிகள் முக்கவசமே இல்லாமலும், எந்தவித தனிமனித இடைவெளி இல்லாமலும் பயணிக்கும் அவல நிலை தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் கரோனாவை கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோல்வியைதான் அடையும்.


ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், வணிக வளாகங்களிலும், காய்கறி மற்றும் இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி அலைமோதுவது தெரிந்தே கரோனாவுக்கு அழைப்பு விடுப்பது போல் உள்ளது. தமிழகத்தில் பருவநிலை மாறுபாட்டால் வருகிற மாதங்கள் குளிர் காலம் தொடங்க இருக்கிறது. பல்வேறு வெளிநாடுகளில் குளிர்காலத்தில்தான் கரோனா தொற்று அதிகமாக பரவியது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் நாம் அனைவரும் கரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு அவசியம் முகக்கவசமும் தனிமனித இடைவெளியையும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.
இவை நமக்கும் பாதுகாப்பு, பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் பாதுகாப்பு. ஆகவே, அனைவரும் பாதுகாப்புடன் இருப்போம். தமிழக அரசு, அதிக பேருந்துகளை இயக்குவதன் மூலம், குறைந்த அளவில் பயணிகளை பயணிக்க அனுமதிப்பதின் மூலம் ஏற்பட இருக்கும் ஆபத்தில் இருந்து அனைவரையும் காக்க முடியும். இதை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.