தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளில் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மே 2ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் அன்றுதான் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதால், அன்றைய தினம் முழு ஊரடங்கு வாக்குபாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி அன்று முழு பொதுமுடக்கம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தாது எனத் தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெளிவுப்படுத்தியுள்ளார்.