நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இருந்துவந்த நிலையில் தற்போது வட மற்றும் உள் மாவட்டங்களிலும் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட வாரியான கொரோனா பரவல் நிலவரம், அளிக்கப்படும் சிகிச்சைகளின் விவரங்கள் மற்றும் ஊரடங்கில் கட்டுப்பாடு, தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடனான ஆலோசனை குறித்து முதலமைச்சர் விளக்கமளித்தார். 

 *  கொரோனா பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். 

* கொரோனா தொடர்பாக பிரதமருடன் 6 முறை, ஆட்சியர்களுடன் 7 ஆலோசனை நடத்தப்பட்டது. 

*  தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

*  தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளது.

*  சென்னையில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர். 

* மக்கள் தொகை நெருக்கம் காரணமாக சென்னையில்  கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. 

*  சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.  

* சென்னையில் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

*  15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

* சென்னையில் கொரோனாவை  தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

* ஏழை மக்களுக்கு ரூ. 1000 நிதியுதவி, மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில்  அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

* சென்னை மக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

* நோய் அறிகுறி உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* இருக்கும் இடத்திற்கே வந்து நடமாடும் வாகனங்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

* நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

* அதிக தொற்று உள்ள பகுதிகளில் அதிக பரிசோதனை செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுரை

* வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

* மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்

*  மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தை மண்டல வாரியாக பிரித்திருந்த நிலையில், மண்டலங்களுக்குள் போக்குவரத்து ரத்து.

* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு சதவிகிதம் குறைவு.

* மருத்துவர்கள், செவிலியர்களை உளமாற பாராட்டுகிறேன்.

* வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நன்றி.

* கொரோனா தடுப்பு பணியில்  அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர்.

* காவல், கூட்டுறவு போன்ற துறையினர், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்களுக்கும் பாராட்டு.

* வெளியில் வந்தால் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்

* மாவட்டங்களுக்குள் நாளை முதல் 30 ஆம் தேதி வரை போக்குவரத்து முற்றிலும் தடை

* மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.