புதுச்சேரி மாநிலத்தில் இன்று 345 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 10,859 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநில கொரோனா நிலவரம் தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதுச்சேரியில் 304 நபர்களுக்கும், காரைக்காலில் 31 நபர்களுக்கும், ஏனாமில் 10 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,753 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 6942 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

புதுச்சேரியில் மேலும் 5 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,859 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறும்போது, ‘’வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. சிலர் எதையும் பற்றி கவலைப்படாமல் வீடுகளில் இருந்து வெளியே வந்து திருமணம், துக்க நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்வதாக புகார்கள் வந்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது 5 நாட்களில் 100 பேருக்கு கொரோனா தொற்றை பரப்புகிறார். இவ்வாறு தான் புதுவையில் தொற்று அதிகமாக பரவுகிறது. எனவே தனிமைபடுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. நானும், அமைச்சர்களும், அதிகாரிகளும் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

எங்களையும், அதிகாரிகளையும் குறைகூறுவதை பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் புதுவையில் முழு ஊரடங்கை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்’’எனத் தெரிவித்துள்ளார்.