பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்கள் சென்னை திரும்பி விட்டனர். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவரது மகன் ரவீந்திரநாத் குமாருடன் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார். 

அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.  அதற்கேற்றார் போல், ரவீந்திரநாத்தும் நேற்று டெல்லி சென்றிருந்தார். பாஜக அமைச்சரவையில் தனக்கு எப்படியும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற கனவில் இருந்த ரவீந்திரநாத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேற்றைய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை ஓ.பிஎஸ் மகனுக்காகவே டிவியில் பார்க்கக் காத்துக் கிடந்தனர் தமிழக அரசியல் கட்சியினர்.
 
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கத்திற்கும் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், அமைச்சரவையில் தமிழகத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியின் கோஷ்டி அரசியல் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சென்னை திரும்பிவிட்டனர். ஆனால், துணை முதல்வர் ஓபிஎஸ் தனது மகனான தேனி எம்பி ரவீந்திரநாத்துடன் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார். 

டிசம்பர் மாத வாக்கில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போதாவது தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளிடம் கேட்டு வருகிறாராம் ஓ.பி.எஸ்.