புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த விவசாயியான தங்கராசு வீட்டில் இருந்தபோது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காந்தீஸ்வரன், பேச்சிமுத்து  ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்கராசுவிடம், நாங்கள் சோப்பு வியாபாரம் செய்வதாகவும், எங்களிடம் சோப்பு வங்கினால் அதில் ஒரு கூப்பன் இருக்கும் என்றும் அந்த கூப்பனில் எந்த பரிசு உள்ளதோ அந்த பரிசை வழங்குவோம் என்றும் கூறியுள்ளனர்.

முதலில் தங்கராசு அவர்களிடமிருந்து சோப்பு ஒன்றை வாங்கி அதில் ஸ்டவ் அடுப்பு இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். தங்கராசுவுக்கு ஸ்டவ் அடுப்பை வழங்கி இந்த பரிசுக்கு மோட்டார் சைக்கிள் விழுந்துள்ளது என்று கூறி உள்ளனர்.  பைக்கை பெற வேண்டுமென்றால் அதற்கு வரியாக ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனை நம்பிய தங்கராசு ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.  வாங்கிக் கொண்ட இருவரும் மறுநாள் தங்கராசு வீட்டிற்கு வந்தனர்.

அவர்கள் தங்கராசுவிடம் ஒருவருக்கு கார் பரிசு விழுந்துள்ளது.  ஆனால், அவர் அதற்கான வரி ரூ. 45 ஆயிரத்தை கட்ட முடியாது என்று கூறி விட்டார்.  உங்களுக்கு அந்த காரை பரிசாக தருகிறோம் எனக் கூறியுள்ளனர். நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தங்கராசு அவர்களுக்கு ரூ. 45 ஆயிரத்தை கொடுத்துள்ளார். நாளை காரை பரிசாக தருகிறோம் என்று தெரிவித்து விட்டு இருவரும் சென்றுவிட்டனர்.

மறுநாள் தங்கராசுவை காந்தீஸ்வரன், பேச்சிமுத்து தொடர்பு கொண்டனர். அவர்கள் வரும் வழியில் போலீசார் சோதனை நடத்தியதாகவும், காருக்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 ஆயிரம் செலுத்திவிட்டு செல்லுங்கள் என்று இன்ஸ்பெக்டர் கூறியதாகவும் தங்கராசுவிடம் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கேட்ட 20 ஆயிரத்தை தந்தால் நாங்கள் காரை கொண்டு வந்து விடுவோம் என்று தங்கராசுவிடம் கூறினர். தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டது தங்கராசுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க அறந்தாங்கி போலீசில் நேரில் சென்று புகார் செய்தார். போலீசார் தங்கராசுவிடம் நீங்கள் ரூ.20 ஆயிரத்தை கையில் எடுத்து சென்று கொடுங்கள். நாங்கள் பின்னால் வந்து மடக்கி பிடிக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி தங்கராசு ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு காந்தீஸ்வரன், பேச்சிமுத்து ஆகியோர் நின்ற பகுதிக்கு சென்று பணத்தை கொடுக்க இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.