from today Vaiko campaign to support DMK candidate in RK nagar
விருதுநகர்
ஆர்.கே நகர் தொகுதியில் இன்று முதல் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். திமுக வெல்வது உறுதி என்று அடித்து சொல்கிறார் வைகோ.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களைக் காக்க மத்திய அரசு தொடர்ந்து தவறி வருகிறது.
தற்போது, மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து நடத்தப்படும் அத்துமீறல்கள் உலகில் எங்கும் நடக்கவில்லை. தங்கச்சிமடம் மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது மத்திய அரசின் மன்னிக்க முடியாத குற்றம். இதைத் தட்டிக் கேட்க முடியாத தமிழக அரசு, மத்திய அரசின் கீழ் தாழ் பணிந்து கிடக்கிறது.
கடலுக்குச் சென்ற 2,100 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாக புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டு, 11 நாள்கள் கழித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கன்னியாகுமரி செல்கிறார்.
அதேநேரம், கேரள முதல்வர் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார். அவர் ரூ. 10 இலட்சம் நிவாரணம் அறிவித்தபோது, தமிழக அரசு ரூ. 4 இலட்சம் அறிவிக்கிறது. அவர் ரூ. 20 இலட்சம் அறிவித்த பின், நீண்ட போராட்டங்களுக்குப் பின் தமிழக அரசு ரூ. 20 இலட்சம் அறிவிக்கிறது.
மத்திய - மாநில அரசுகள் தங்கள் கடமையை செய்யவில்லை என நான் குற்றம் சாட்டுகிறேன்.
தற்போதைய ஆளும் கட்சியினரும், முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்து தற்போது சுயேச்சையாக தேர்தலில் நிற்பவரும் மக்களுக்கு நூதன முறையில் பணம் விநியோகம் செய்கின்றனர்.
தேர்தல் ஆணையம் பண விநியோகத்தை தடுக்க முயன்றாலும், அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பண விநியோகம் நடத்தப்படுகிறது.
இருப்பினும், திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. ஆர்.கே நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக மதிமுக உறுப்பினர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை (அதாவது இன்று) முதல் ஆர்.கே நகரில் நான் வேன் மூலம் பிரசாரம் செய்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
